மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நள்ளிரவில் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பேருந்து, அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் நான்கு பேர் பலியாகினர். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்றார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது அதிவேகமாக மோதியது. அத்துடன் நிலைகுலைந்த பேருந்து மேலும் தறிகெட்டு ஓடி எதிரே வந்த இருசக்கர வாகனத்திலும் பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய மூவரும் பேருந்தின் கீழே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் பேருந்து நடத்துநர் விஜயசாரதி உள்ளிட்ட 26 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அனைவரையும் மீட்டு 108 வாகனத்தின் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.




இதில் அரசு பேருந்து நடத்துநர் விஜயசாரதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 11 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பேருந்து ஓட்டுநர் பழனியைச் சேர்ந்த பிரதாப், டேங்கர் லாரி ஓட்டுநர் கேரளாவைச் சேர்ந்த ஜான் பியர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் – நாகை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக உள்ளதும், சாலையின் ஒரு வழியில் மட்டுமே எதிரெதிரே வாகனங்கள் இயக்கப்படுவதும் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து குருடு ஆயில் கசிந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுச்சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil