சென்னை, நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின்போது, 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தன்னை அழைத்து கண்டித்ததாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின்போது, 5 பேர் குளத்தில் மூழ்கிய சம்பவம் சென்னையை உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதே போல, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், நாகை மாலி, ராமச்சந்திரன், வி.சி.க உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, வேல்முருகன், பா.ம.க உறுப்பினர் கோ.க. மணி ஆகியோர் சட்டப்பேரவையில் இந்த சம்பவம் குறித்து பேசினார்கள்.
இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதிலளித்துப் பேசினார். அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது: “சென்னை, நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் இதயம் இருக்கிற அனைவரும் இரக்கப்படுகிற அளவுக்கு நடந்த துயரச் சம்பவத்தைக் குறித்து, சட்டசபையில் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் குழு தலைவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகை மாலி, ராமச்சந்திரன், வேல்முருகன், வி.சி.க-வைச் சேர்ந்த எஸ்.எஸ். பாலாஜி, ஜெகன்மூர்த்தி, கோ.க. மணி ஆகியோர் அரசின் கவனத்தை ஈர்த்து அமர்ந்திருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த குளம், திருக்கோயிலின் குளம் அல்ல. அது பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுகிற குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டு காலமாகத்தான் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. சாமியின் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, இந்த தீர்த்தவாரி விழா நிகழ்வு நடைபெறும்.
இந்தக் குளத்தைக்கூட 2022-ம் ஆண்டில் 50 லட்சம் ரூபாய் செலவிலே நடைபாதை, சுற்றி வருகிற சுற்றுச்சுவர் போன்றவற்றை ஏற்படுத்தித் தந்தோம். இந்த திருக்கோயிலை நிர்வக்கின்றவர்கள், சர்வமங்களம் சேவா சங்கம் டிரஸ்ட் என்று ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்தி, அதில் 5 பேர்கள் நிர்வாகிகளாக இருந்து அந்த திருக்கோயிலை நிவகித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு 08.09.2022 அன்று தொல்லியல் துறை அனுமதி, மண்டலக் குழு அனுமதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்டக் குழுவான மாநிலக் குழுவின் அனுமதி இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள். உடனடியாக இணை ஆணையாளர், 06.09.2022 அன்று அந்த திருக்கோயிலை பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் அலுவலரை தக்காராக நியமித்தார். உடனடியாக அந்த திருக்கோயிலைச் சார்ந்த டிரஸ்டியினர் மேல்முறையீடு செய்து ஆணையர் அலுவலகத்தில் மனு செய்திருக்கிறார்கள். அந்த மனுவின் விசாரணை வருகிற 12.04.2023 குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை விலாவாரியாக சொல்வதற்கு காரணம், தானாக முன்வந்து இந்த டிரஸ்டியினர் எடுத்துக்கொள்கின்ற பணிகளின் காரணமாக, இப்படிப்பட்ட விபத்துகள் நடைபெறுகிறது. எது எப்படி இருந்தாலும், உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியது, விலைமதிக்க முடியாத மனித உயிர்கள். ராகவன், ராகவ, சூரியா, விக்னேஷ், யோகேஸ்வரன் என 5 பேரின் விலை மதிப்பில்லா உயிர்கள். அவர்களுடைய பெற்றோர்கள், தந்தை, தாயின் கனவு நேற்று சிதைந்தபோது, அவர்கள் படுகிற துயரத்தை முதல்வர் உணராதவர் அல்ல. இரக்கமான இதயத்தை தன்னுள்ளே வைத்திருக்கிற முதல்வர், இந்த சம்பவம் நடந்த உடன் உடனடியாக அந்த மாவட்டத்தினுடைய அமைச்சரை அழைத்து, அந்த சம்பவத்துக்கு யார் காரணம் என கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அந்த கோயில் குளம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற உடன், முதலமைச்சர் என்னை அழைத்து, இப்படி தீர்த்தவாரி வைபவம் நடக்கிறபோது, குளத்தை தூய்மையாகவும், தூர்வாராத நிலையிலும் ஏன் வைத்திருந்தீர்கள் என்று என்னை கண்டித்தார்கள்.
நிச்சயமாக அவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுவதை இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிக்கவில்லை. இருந்தாலும், இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய இழப்பில், அதை ஒரு குற்றமாக சொல்ல நான் விரும்பவில்லை. இந்த அவையில், முதலமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து, நம்முடைய அமைச்சர் அவர்களுடைய இல்லங்களுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறி, இறுதி ஊர்வலம் வரை உடனிருந்து அடக்கம் செய்துவிட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார். பேசிய உறுப்பினர்கள், நிவாரண நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். கடந்த காலங்களில் இப்படிப்பட்ட விபத்துகளில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறையை முதல்வர் பின்பற்றியிருக்கிறார். தங்கள் பிள்ளைகளை இழந்துவாடும் அந்த குடும்பத்தாருக்கும், அந்த பிள்ளைகள் மறைவால் அந்த பகுதியில் நிலவும் துக்ககரமான நிகழ்ச்சிக்கும் ஒட்டுமொத்தமாக எந்த துறையாக இருந்தாலும் இந்த ஆட்சிக்கு பங்கு இருக்கிறது என்பதால், வருகின்ற காலங்களில் இது போன்ற நிகழ்வுகள், நடக்காமல் இருப்பதற்கும், அதே போல, இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துகிறபோது, சம்பந்தப்பட்டவர்கள், டிரஸ்ட்கள், அமைப்புகள் நடத்துகின்றபோது, துறைக்கு தகவலை தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோளை வைக்கிறேன். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவிட்டு, அந்த குடும்பத்தார் கோரும் உதவிகளில் எவையெல்லாம் செய்து தரமுடியுமோ அதையெல்லாம் செய்து தருவதற்கு முதலமைச்சர் முன்வருவார் என்பதையும் தெரிவிக்கிறேன்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“