/tamil-ie/media/media_files/uploads/2022/06/sekarbabu.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அதன்படி சுமார் 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நாளை ஜூன் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகவும், 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை வரவு செலவுகள் குறித்த ஆவணங்களை தர வேண்டும் என்றும் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. சட்டபூர்வமாக கோயிலில் அனைத்தும் செயல்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்போவதாக அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸ்க்கு பதிலளித்த தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது, இந்து சமய அறநிலையத்துறை எங்களை கட்டுப்படுத்தாது என்ற நிலையில், இன்று இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திடீர் வருகையால் பரபரப்பு ஏற்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/cdm-minister-sekarbabu-visit.jpg)
அமைச்சரை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அவர் கோயிலுக்குள் சென்று கனகசபையில் (சிற்றம்பல மேடை) ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். பின்னர் கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சாமிகளை தரிசனம் செய்தார். பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசினார். அப்போது தீட்சிதர்கள் கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது, கோயில் பூஜைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிற்கு விளக்கமளித்தனர். அவற்றை அமைச்சர் சேகர்பாபு பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
அப்போது கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கம் அளித்தனர். அமைச்சர் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.
இதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் எனவும் கூறினார். எதையுமே தடுப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/minister-sekarbabu-cdm-visit.jpg)
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு "தீட்சிதர்கள் சம்பந்தப்பட்ட அவர்களது கோரிக்கையையும் அரசின் நிலைப்பாடு குறித்தும் பகிர்ந்து கொண்டோம். இந்து அறநிலையத்துறை சட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக்கஷ்டம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அன்பான வேண்டுகோள்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமாக நல்ல ஒரு சுமுக தீர்வு ஏற்படும் என எனக்கு தோன்றுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி துலாக்கோல் போன்று அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது" என்றார்.
மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய முறையில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்," மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கான செய்திகள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லுகிறார். அவர் ஒருவர் மட்டும்தான் அப்படி சொல்கிறார். முன்தினம் கூட தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றிருந்தோம் அவர் நல்ல முறையில் உபசரித்தார்.
26 ஆயிரம் மரக்கன்றுகள் நடுகின்ற திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் துவங்கி வைத்தார். அவர் கட்டிய இருபத்தி நான்கு அறைகளை என்னை கொண்டு திறக்க வைத்தார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த ஆதீனங்களையும், ஜீயர்களையும், தீட்சிதர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல.
அனைவரும் தமிழக முதல்வரின் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆகவே ஏதோ ஒரு ஆதீனம் பேசுவதற்காக அதற்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை என்றார். இந்த சந்திப்பின்போது, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாளையும் (ஜூன்.7), நாளை மாறுநாள் (ஜூன்.8) இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கணக்கு வழங்குகள், நகைகள் உள்ளிட்ட பலற்றை ஆய்வு செய்ய உள்ள நிலையில் அமைச்சரின் இந்த திடீர் வருகை சிதம்பரத்தில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.