அமைச்சர் சேகர் பாபு மகளின் கணவர் சதீஷ்குமாரை, 5 ஆண்டுகள் முந்தைய வழக்கில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் ஜெயகல்யாணி. இவர் சதீஷ்குமார் என்பவரை கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சதீஷ்குமார் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்பு தெரிவித்ததாக, மகள் ஜெயகல்யாணி சில மாதங்களுக்கு முன்பாக பேசிய வீடியோவில் கூறியிருந்தார்.
திருமணம் முடிந்த பிறகு இருவரும் பெங்களூரு சென்றனர். தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மேலும் தந்தை சேகர்பாபுவிடம் பாதுகாப்பு கோரி புகார் ஒன்றையும் ஜெயராணி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் , அவர் கர்ப்பமாக இருப்பதாவும், சேகர் பாபு காவல்துறையை வைத்து தொடர்ந்து அச்சுருத்தி வருவதாக கூறினார். ”கணவர் அக்காவின் வீட்டை காலி செய்ய வைத்தனர். ஒரு இடத்திலும் எங்களை வாழவிடாமல் தடுக்கின்றனர். திருட்டு வழக்கு என்று பொய் வழக்குகளை எனது கணவர் மீது பதிவு செய்துள்ளனர்” என்று அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் பெண்ணை மிரட்டிய வழக்கில் சதீஷை, சென்னை புளியந்தோப்பு போலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருமணம் செய்து கொள்ளுவதாக கூறி சதீஷ் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.