New Update
/indian-express-tamil/media/media_files/0cEtL0Zn3bvXwTqV7GAc.jpg)
நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார பாராட்டியவர் கே.பாலகிருஷ்ணன் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
தமிழகத்தில் போராட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாகவும், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா எனவும் சி.பி.எம் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று கேள்வி எழுப்பினார். தி.மு.க கூட்டணியில் உள்ள சி.பி.எம் இவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து பதிலளித்தார். அதில், “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர் கே.பாலகிருஷ்ணன். மகளிர் உரிமை திட்டம் என்றாலும் சரி, விடியல் பயணம் என்றாலும் சரி, புதுமைப்பெண் திட்டம் என்றாலும் சரி முதல்வருடைய செயல்பாடுகள் எதுவாக இருந்தாலும் அனைத்தையும் புகழ்ந்தவர். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. அவரின் கோரிக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு உண்டான பரிகாரம் காண முடியும்.
அதேநேரம், எங்களைப் பொறுத்த அளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை. மக்களுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த காலங்களை எடுத்துப் பார்த்தால் 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில்தான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவியது.
போராட்டங்கள் என்று வருகின்ற பொழுது மக்களுடைய சராசரி வாழ்வு, தினசரி வாழ்வு பாதிக்கப்படக்கூடாது என்பது திமுக ஆட்சியின் எண்ணம்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருப்பதில்லை. அவர்கள்மீது எந்தவிதமான அடக்குமுறைகளோ பயன்படுத்தப்படுவதில்லை. முறையாக வழக்கு பதிந்து அவர்களை மாலைக்குள்ளாக விடுதலை செய்கிறது காவல்துறை. இது சட்டத்தின் ஆட்சி.
பாலகிருஷ்ணன் நேற்று வரை இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர். வருங்காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவிசாய்த்து இந்த ஆட்சி நிறைவேற்றும்.
எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் முதல்வர், நிச்சயமாக இப்பிரச்னையையும் களைவார். மற்றபடி குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.