சென்னை முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதற்கிடையில், கோயம்பேட்டிற்கு பதிலாக முடிச்சூர் அருகே மண்ணிவாக்கத்தில் புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சென்னை முடிச்சூர் அருகே ஆம்னி பேருந்து நிறுத்த வளாகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த ஐடியல் பார்க்கிங் 5 ஏக்கரில் 300 பேருந்துகள் மற்றும் 300 ஊழியர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தி உள்ளோம். புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும்,” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“