/indian-express-tamil/media/media_files/2025/06/05/TiNXHVNugTCNwJnLvT3g.jpg)
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் புதிய திட்டங்களுக்கும், நடந்து முடிந்த திட்டங்களை துவக்கி வைப்பதற்கும், பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்கும் திருச்சி வருகை தந்தார்.
அந்த வகையில், சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் தரிசனம் செய்த அமைச்சர் மூலவர் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு தங்க தேரை இழுத்து வழிபட்டார். பின்னர், சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரகாரங்களில் ரூபாய் 2 கோடி செலவில் ஒளிரூட்டப்படும் லைட்டுகள் அமைக்கப்பட்டதை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோவில்களில் பெருகிவரும் பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக இருக்கிறது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் மற்றும் குடமுழுக்குக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
தமிழகத்தில் 36 திருக்கோயில்களில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. அதேபோன்று ராஜகோபுரம் அதை சுற்றி இருக்கிற பிரகாரங்களில் இரண்டு கோடியில் ஒளிருூட்டப்படும் லைட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் உள்ளிட்ட ஆறு திருக்கோவில்களுக்கு ஒளிரூட்டும் பணி அறிவிக்கப்பட்டு முதல் திருக்கோயிலாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம்( இன்று ) நாகப்பட்டினத்தில் இருக்கின்ற ஈஸ்வரன் திருக்கோவில் 3 ஆயிரம் ஆவது திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சேதம் அடைந்த கிழக்கு கோபுரம் உபயதாரர் சீரமைப்பு பணிகளை ஏற்றுக் கொண்டதாலும், பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.
விரைவாக பணிகளை முடிக்க அதிகாரியிடம் அறிவுறுத்தி உள்ளோம். மதுரையில் நடைபெறும் மாநாடு அரசியல் மாநாடு மதத்தால் இனத்தால் மொழியால் மக்களை பிளவுபடுத்தும் மாநாடு இது சங்கிகள் நடத்தும் மாநாடு உண்மையான முருக பக்தர்கள் இந்த ஆட்சி போற்றுவது புகழ்வதுமாக இருக்கின்றார்கள்.
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்குவை தடுப்பதற்காக ஒரு சில சக்திகள் நீதிமன்றத்தை நாடி உள்ளன. இதுவரை 120 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று உள்ளது. அறுபடை வீடு முருக பெருமான் கோவில்களில் திருப்பணிகள் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் மையப்படுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.
உண்மையான முருக பக்தர்கள் அதில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சங்பரிவார்கள் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தான் மதுரையில் நடைபெறும் முருக பெருமான் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், பெரம்பலூர் எம்பி அருண் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
க. சண்முக வடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.