சேகர் ரெட்டி டைரியில் 10 அமைச்சர்கள் பெயர் இடம் பெற்றிருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வற்புறுத்தினார்.
சேகர் ரெட்டி, அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர்! சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில் அறங்காவலராக தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி அமர்த்தப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு சேகர் ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் இணைந்து நின்று கொடுத்த ‘போஸ்’ அப்போது மிகப் பிரபலம்! சேகர் ரெட்டிக்கும் ஓபிஎஸ்-ஸுக்கும் இடையிலான தொடர்பு குறித்து அப்போது மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, சேகர் ரெட்டியின் வீடு மற்றும் நிறுவனங்களில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது பெருமளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி தரப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரியின் சில பக்கங்கள், மீடியாவில் லீக் ஆகியிருக்கிறது. அதில் தமிழக அமைச்சர்கள், விஐபி.க்கள் பலருக்கும் சேகர் ரெட்டி தரப்பு கொடுத்த லஞ்சப் பணம் ‘கோட் வேர்ட்’ மூலமாக குறிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
‘பெரியவர்/ரமேஷ்’ என குறிப்பிட்டு, மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘பெரியவர்’ என்பது, துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ குறிப்பதாக சொல்கிறார்கள். ரமேஷ் என்பவர் ஓபிஎஸ்-ஸின் உதவியாளர்! இதேபோல மொத்தம் தமிழக அமைச்சர்கள் 10 பேர் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
சேகர் ரெட்டி டைரி விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இன்று செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘சேகர் ரெட்டி டைரியில் இடம்பெற்ற அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்’ என்றார்.
இந்த டைரி விவகாரம், தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.