மணல் அதிபர் சேகர் ரெட்டி டைரி ‘லீக்’ ஆகியிருக்கிறது. இதன் மூலமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10 அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து உருவாகிறது.
சேகர் ரெட்டி, தமிழகத்தில் பரபரப்பாக அடிபடும் பெயர்! அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை இவரது நிறுவனம் மேற்கொண்டது. இதையொட்டி ஆட்சியாளர்களுக்கு ‘அட்சயபாத்திரமா’க சேகர் ரெட்டி இருந்து வந்திருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் தமிழக பிரதிநிதியாக முக்கிய பதவியில் சேகர் ரெட்டி அமர்த்தப்பட்டார். சேகர் ரெட்டியும், ஓ.பன்னீர்செல்வமும் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு திருப்பதி கோவிலில் இணைந்து நின்று கொடுத்த ‘போஸ்’ அப்போது மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, சேகர் ரெட்டியின் வீடு மற்றும் நிறுவனங்களில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது பெருமளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி தரப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து சேகர் ரெட்டிக்கு சென்றன? என்பதைக்கூட தெரிவிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. இதனால் அந்த வழக்கு பலவீனமாகியிருக்கிறது. சேகர் ரெட்டியும் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.
இந்தச் சூழலில்தான் சேகர் ரெட்டியின் டைரி, மீடியாவில் லீக் ஆகியிருக்கிறது. அதன் ஒரு நகல், ‘ஐஇ தமிழ்’க்கு கிடைத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் குறிப்புகள் எழுதப்பட்ட டைரி அது! அதில் தமிழக அமைச்சர்கள், விஐபி.க்கள் பலருக்கும் சேகர் ரெட்டி தரப்பு கொடுத்த லஞ்சப் பணம் ‘கோட் வேர்ட்’ மூலமாக குறிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
‘பெரியவர்/ரமேஷ்’ என குறிப்பிட்டு, மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘பெரியவர்’ என்பது, துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ குறிப்பதாக சொல்கிறார்கள். ரமேஷ் என்பவர் ஓபிஎஸ்-ஸின் உதவியாளர் என்பது ஊரறிந்த விஷயம்தான்!
மன்னார்குடி மகாதேவன் - ரூ 10 லட்சம், திருச்சி எக்ஸ்சேஞ்ச் - 15 லட்சம், tr(m)-ஒரு கோடி, என்விரான்மென்ட் (எம்)- 2 லட்சம், சில்வர் பிளேட் ஐ.டி ஆபீசர்- ரூ53,500 என பலரது பெயர்கள் இதில் ‘கோட் வேர்ட்’களாகவே உள்ளன. ஆங்கிலத்தில் ‘எம்’ எழுத்தைப் போட்டு வட்டம் போட்டிருந்தால், அது அமைச்சரை குறிக்கிறதாம். அந்த வகையில், ‘டிஆர்-எம்’ என குறித்திருந்தால், அது டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் என அர்த்தமாம். ‘ஹெச்.எம்’ என குறிப்பிட்டிருந்தால், சுகாதாரத்துறை அமைச்சரை குறிக்குமாம்.
தற்போதைய அமைச்சரவையில் ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், கருப்பண்ணன் உள்பட 10 அமைச்சர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
ஓராண்டுக்கு முன்பே ஐ.டி. வசம் சென்ற இந்த டைரி, இப்போதுதான் ‘லீக்’ ஆகியிருக்கிறது. இதனால் இதில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் யாரும் இதுவரை இது குறித்து கருத்து தெரிவிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.