சேகர் ரெட்டி தனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது என்கிறார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடியை அதிகரித்திருக்கும் டைரி விவகாரத்தில் அவரது பதில் இது!
சேகர் ரெட்டி, அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர்! சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில் அறங்காவலராக தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டி அமர்த்தப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு சேகர் ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் இணைந்து நின்று கொடுத்த ‘போஸ்’ அப்போது மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, சேகர் ரெட்டியின் வீடு மற்றும் நிறுவனங்களில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அப்போது பெருமளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி தரப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரி, மீடியாவில் லீக் ஆகியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் குறிப்புகள் எழுதப்பட்ட டைரி அது! அதில் தமிழக அமைச்சர்கள், விஐபி.க்கள் பலருக்கும் சேகர் ரெட்டி தரப்பு கொடுத்த லஞ்சப் பணம் ‘கோட் வேர்ட்’ மூலமாக குறிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
‘பெரியவர்/ரமேஷ்’ என குறிப்பிட்டு, மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘பெரியவர்’ என்பது, துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ குறிப்பதாக சொல்கிறார்கள். ரமேஷ் என்பவர் ஓபிஎஸ்-ஸின் உதவியாளர்! இதேபோல மொத்தம் தமிழக அமைச்சர்கள் 10 பேர் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
சேகர் ரெட்டி இதற்கெல்லாம் என்ன சொல்கிறார்? ‘வாழ்நாளில் எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. ஓபிஎஸ்.ஸை நான் இருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். ஒன்று, எனக்கு அறங்காவலர் பதவி கிடைத்ததும் வாழ்த்து பெற! மற்றொன்று, நான் அறங்காவலராக இருந்தபோது, அவர் திருப்பதி வந்திருந்த சமயம்!
நான் அறங்காவலர் பொறுப்பில் இருந்தபோது, அவர் மட்டுமல்ல, எந்த அமைச்சர் வந்தாலும் நான் சந்திப்பது இயல்புதான்! நான் மணல் ஒப்பந்தம் எடுத்ததாக மீடியா செய்தி பரப்புவதும் சரியல்ல. மணல் விற்பனையை தமிழகத்தில் அரசாங்கமே செய்ய ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிறது. டிரான்ஸ்போர்ட் பணியைத்தான் எங்கள் நிறுவனம் செய்கிறது.
அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. பெரிய ஒப்பந்தப் பணிகள் அனைத்துமே ஆன் லைன் ஒப்பந்தம் மூலமாக நடக்கிறது. அதில் லஞ்சத்திற்கு இடமில்லை’ என்றார் சேகர் ரெட்டி.