அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இன்று தனது 54-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடி வரும் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை செல்லூர் ராஜு தெரிவித்துக் கொண்டார். மேலும், பா.ஜ.க, அ.தி.மு.க இடையே ஒட்டும், உறவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
“பா.ஜ.க, அ.தி.மு.க இடையே ஒட்டும், உறவும் இல்லை என ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். தி.மு.க அரசு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கிறோம். வாக்கு வங்கியை தெரிந்து கொள்வதற்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சியை கட்டி காக்க ராகுல் காந்தி விடா முயற்சி எடுத்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில் தி.மு.க இருக்கிறது. கூட்டணி கட்சிகள் ஆதரவு இல்லாமல் தி.மு.க தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக கூட்டணிக் கட்சிகள் தயாரா?. 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டு தங்களுடைய பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்” அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“