scorecardresearch

‘எனது பெயருக்கு ஆ.ராசா களங்கம் ஏற்படுத்துகிறார்’: செல்லூர் ராஜு பேட்டி

ஆ.ராசாவுக்கு தி.மு.க., தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும். அப்போது தான் தி.மு.க.,விற்கு கொஞ்ச, நஞ்ச மதிப்பும் இருக்கும்- செல்லூர் ராஜூ

‘எனது பெயருக்கு ஆ.ராசா களங்கம் ஏற்படுத்துகிறார்’: செல்லூர் ராஜு பேட்டி
Sellur Raju about A Raja Controversial speech

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ, தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.

பின்னர் பைகாரா மாநகராட்சி பள்ளியில், செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ” ராஜா ஒன்றும் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடை பெயர் கூட ராஜா தான். ஆனால் எங்களுடைய பெயர்களுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆ.ராசா செயல்படுகிறார். இதுபோன்ற பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் தான் வருத்தப்பட வேண்டும்.

இவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும் தி.மு.க., தலைவர் அமைதியாக உள்ளார். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள சுழலில், மேலும் பாதிப்படையும் வகையில் ராசா பேசி வருகிறார்.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பிறப்பு குறித்து தவறாக பேசினார். தற்போது இப்படி பேசி உள்ளார். எனவே ஆ.ராசாவுக்கு தி.மு.க., தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டும். அப்போது தான் தி.மு.க.,விற்கு கொஞ்ச, நஞ்ச மதிப்பும் இருக்கும்.

விலை வாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ.ராசா பேச வைக்கப்படுகிறாரா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏன் முதல்வர் ஆ.ராசா விசயத்தில் மெளனியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதுவே அதிமுகவினர் இப்படி பேசி இருந்தால் கடுமையாக நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும்.

2 ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை அவர் கொடுத்திருப்பார் போல, அதனால் அவரை கண்டிக்க பயப்படுகின்றனர் என எண்ணுகிறேன்.

தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில் கூட ஒரு தாசில்தாரை தி.மு.க.வைச் சேர்ந்த நபர் அடித்தார். இது போன்ற பல்வேறு வன்முறை சம்பவங்களை தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நிகழ்த்துவார்கள்.

எங்கள் ஆட்சியில் நாங்கள் சொல்வதை போலீஸ் ஏட்டு கூட கேட்க மாட்டார்கள் ஆனால் தி.மு.க., ஆட்சியில் டி.எஸ்.பி.,யை டீ வாங்கிட்டு வரசொல்லி அராஜகம் செய்வார்கள். ஸ்டாலின் ஆட்சி வந்தாலும் உதயநிதி வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும்.

கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ராமேஸ்வரம் தீர்த்தவாரியில் குளித்து சாமி தரிசனம் செய்து கொண்டது தொடர்பான கேள்விக்கு, இதை ஆ.ராசாவிடம் தான் கேட்ட வேண்டும். அதே போல் ஆக்டிங் முதல்வராக செயல்பட்டு வரும் சபரீசன் ஊர், ஊராக கோயிலுக்கு செல்கிறார். துர்கா ஸ்டாலின் செல்கிறார்.

இதற்கெல்லாம் ஆ.ராஜா என்ன சொல்வார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அறிஞர் அண்ணா சொன்னார். இதையெல்லாம்  தாங்கும் இதயம் தான் ஸ்டாலினின் உள்ளது போல !

முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத் திறன் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ஸ்டாலினுக்கு நிர்வாக திறன் இருக்கா என தெரியவில்லை. ஆனால் கட்ட பஞ்சாயத்து, ஊழல் பெருகிப்போனது. அதேபோல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை வஸ்துக்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

பள்ளிக்கூடங்களில் அருகே போதை பொருட்கள் விற்பனை அதரித்துள்ளதாக மதுரையில் நீதிபதியிடமே புகார் வந்துவிட்டது. அதனை நீதிபதி தலைமையில் முதல்வர் அமைத்த குழுவே குற்றம்  சொல்கிறது. இது  வெட்கக்கேடானது. இதையும் மூடி மறைக்கிறார் முதல்வர். இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

இந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடு இருப்பதற்கு பள்ளிக் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுக்கும் சீருடை கூட சரியில்லை. அது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பே நடந்துவிட்டது.

தென்காசி பாஞ்சான்குளம் கிராமத்தில் நடைபெற்ற சாதிய பாகுபாடு குறித்த கேள்விக்கு, இது ஒரு அருவருக்கப்படும் சம்பவம். தமிழகம் மற்ற மாநிலங்களை விட வித்தியாசமானது. அண்ணன், தம்பி போல பழகிவரும் நம்மிடம் இப்படியான சம்பவம் நடைபெறுகிறது.

கே.பாலகிருஷ்ணன் திருமாவளன், முத்தரசன் உள்ளிட்டோர் அமைதியாக இருப்பது ஏன். வெளியூர்களுக்கு சென்றுவிட்டனரா ? தேர்தல் சீட்டுக்காக தி.மு.க.,விடம் அமைதியாக இருக்கின்றனர். தற்போது பல்வேறு வகையான காய்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sellur raju about a raja controversial speech