மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட வேண்டும் என கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் பிப்ரவரி 13 ஆம் தேதி மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரை மாநகராட்சியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. ஊழல்கள் அதிகரித்துள்ளன. கட்டட அனுமதி பெற்ற பிறகு, வீடுகளுக்கு பதிலாக வணிக வளாகங்கள் கட்டப்படுகின்றன," என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் மந்தகதியில் உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து, ஆறு மாநகராட்சி ஆணையர்கள் மாறியுள்ளனர். உரிய வழிகாட்டுதல்கள் இல்லாததால்தான் நக்கீரர் தோரண வாயிலை இடித்த போது ஒருவர் உயிரிழந்தார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்," என்று தெரிவித்தார்.
"சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது தமிழக முதல்வர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி நல்ல நிர்வாகம் வழங்குவார். அதனால், அவர் பின்னால் நாம் உறுதியாக நிற்கிறோம். 2026-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைக்கும். எங்களது கட்சிக்குள் எந்தவித பிரிவினையும் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது," என்று கூறினார்.
இந்த சந்திப்பின்போது மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலை எம். ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.