நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை அமித்ஷா கேட்டுக்கொண்ட அடிப்படையில் ஆதரித்தோம் என செல்லூர் ராஜூ கூறினார்.
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு ஆகியன நேற்று(ஜூலை 20) நாடாளுமன்றம் மக்களவையில் நடந்தது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி.க்கள் வேணுகோபால், ஜெயவர்தன் ஆகியோர் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக குற்றம்சாட்டினர்.
நீட் தேர்வு, கச்சத் தீவு மீட்பு, அணைகள் பாதுகாப்பு அம்சம் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் நிலையை சுட்டிக்காட்டி மத்திய அரசை வலியுறுத்தினர். ஏற்கனவே தமிழ்நாட்டில் முக்கிய அரசு ஒப்பந்ததாரர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருவதால், அதிமுக என்ன மாதிரியான நிலை எடுக்கப் போகிறது? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
நாடாளுமன்ற விவாதத்தில் அதிமுக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதும், அதிமுக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் ஆதரவா, எதிர்ப்பா என்பதை சஸ்பென்ஸாக வைத்திருந்து, கடைசியாக நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
அதிமுக ஆதரவு உதவியுடன் 325-126 என அபார எண்ணிக்கையில் மோடி அரசு ஜெயித்தது. இதற்கிடையே மத்திய அரசுத் தரப்பில் இருந்து யாரும் கேட்காமலேயே அதிமுக ஆதரவு அளிப்பதாகவும் விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேட்ட அடிப்படையிலேயே மத்திய அரசுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம் என அதிமுக தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
செல்லூர் ராஜூ இது தொடர்பாக இன்று (ஜூலை 21) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘ஊழல் எல்லா காலத்திலும் நடந்திருக்கிறது. இப்போது ஊடகங்கள் அதிகம் என்பதால் உடனுக்குடன் வெளிவருகிறது.
அமித்ஷா கூறியது திமுக ஆட்சியில் நடந்த ஊழலைத்தான். அமித்ஷா ஆதரவு கேட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்பி.க்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’ என்றார் செல்லூர் ராஜூ.