அண்மையில், சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா நோய் போல, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையானது.
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி மற்றும் இந்து அறநிலையத் துறை சேகர்பாபுவைக் கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாஜ.க சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
அப்போது, அவர், மதுரையில் 1956-இல் நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பி.டி.ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் கூறினார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தி.மு.க தலைவர்கள் மட்டுமல்லாமல், பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணமலை முன்னாள் முதல்வர் அண்ணாவைப் பற்றிய அவதூறு பேச்சுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் கடும் கண்டனங்களையும் எச்சரிக்கையையும் விடுத்தனர்.
இந்நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாவைப் பற்றி அவதூறு பேசினால் அண்ணாமலையின் நாக்கு துண்டாகிவிடும், நாக்கு அழுகிவிடும் என்று அண்ணாமலையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
அண்ணா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: “மதுரையின் வளர்ச்சிக்கு அதிமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. மதுரையில் இன்னும் 50 ஆண்டிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எடப்பாடியார் திட்டம் தீட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரையில் பல்வேறு பாலங்களை கொண்டுவந்துள்ளோம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அண்ணாவைப் பற்றி ஒரு சிலர் கேலி பேசுகிறார். இறந்த தலைவர்களைப் பற்றி கேலி பேசுகிறவரை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்றைக்கும் நாங்கள் கலைஞர் என்று தான் சொல்கிறோம். கலைஞர் இருக்கும் பொழுது அவரை திட்டி இருக்கிறோம். மறைந்த தலைவரை மதிக்க வேண்டும். மதிக்கத் தெரியாதவர்களை இந்த தமிழ் சமுதாயம் மிதிக்கத்தான் செய்யும். அரசியலில் எங்கேயோ இருக்கலாம், ஆளுங்கட்சி என்ற மிதப்பில் பேசினால் அண்ணாவைப் பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு துண்டாகும் இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா மட்டும் இயக்கம் தொடங்காமல் இருந்திருந்தால் சாதாரண குப்பனும், சுப்பனும் சட்டமன்ற உறுப்பினராகவும் மாமன்ற உறுப்பினராகவும் ஆகியிருக்க முடியாது.
சாதாரண மக்கள் எல்லாம் மாமன்ற உறுப்பினராக ஆகியிருக்க முடியுமா? சாதரணமாக இருப்பவர்களும் போட்டிக்கு வரலாம் மக்கள் பணியாற்றலாம். அந்த சாதனையை புரிந்தவர் பேரறிஞர் அண்ணா, அவரைப் பற்றி அவதூறாக பேசினால் நாக்கு அழுகிவிடும், யார் பேசினாலும் சரி அவருடைய நாக்கு அழுகிப்போகும்.
நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, ஐ.ஏ.எஸ் அதிகாரி பல பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் வித்திட்டவர்கள் பெரியாரும், அண்ணாவும் தான். தொட்டால் தீட்டு பட்டால் பாவம், இந்த தெருவில் நடக்கக் கூடாது என்பதை மாற்றியவர்கள் இந்த இரண்டு பேரும் தான். சாதாரணமாக இது மாற்றப்படவில்லை . இந்தியாவில் ஆளுகின்ற கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள் நாங்கள் தான் பெரியவர்கள் என்று, அங்கெல்லாம் பாலாறும் தேனருமா ஓடுகிறது. தமிழகம் தான் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைந்துள்ளதாக” என்று செல்லூர் ராஜூ ஆவேசமாகப் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.