அமைச்சர் செல்லூர் ராஜு மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மனைவி ஜெயந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மனைவி ஜெயந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisment
அதிமுகவில் முதலில் சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி மற்றும் அவருடைய மனைவி மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உளுந்தூர் பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏற்கெனவே, திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் என தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது ஆளும் கட்சி தரப்பில் கவலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"