/indian-express-tamil/media/media_files/2025/02/18/9eYN0DKv4wh7sfHuNScu.jpg)
"எம்.பி ஜோதிமணி பெருந்தன்மையோடுதான் இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார். எம்.பி.க்கான மரியாதையைம், மதிப்பையும் ஜோதிமணிக்கு அளிக்க வேண்டும்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி, கரூர் காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் தி.மு.க.வில் இணைந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, கூட்டணித் தலைவர்களைப் புண்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் எனத் தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். மேலும், கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு உரிய மரியாதை அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் கவிதா, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தேவை என்று உணர்ந்து தி.மு.க.வில் இணைந்ததாக அண்மையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
காங்கிரஸும் தி.மு.க-வும் இந்தியா கூட்டணியில் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் தி.மு.க-வில் இணைந்தார் என்று செந்தில் பாலாஜி பதிவிட்டது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எதிர்வினையாற்றினார்.
“அர்ஜென்டினாவில் அரசியல் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்ததால், உடனடியாக இதற்குப் பதிலளிக்க முடியவில்லை” என்று தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
ஜோதிமணி தனது கண்டனப் பதிவில், "இதுபோன்ற அவமரியாதையை ஏற்க மாட்டோம்" எனக் கூறியதுடன், செந்தில் பாலாஜியின் பதிவு காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைப் பாதித்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விவகாரத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படிச் செய்திருக்கக் கூடாது” என்றும் “எம்.பி-க்கான மரியாதையையும் மதிப்பையும்” செந்தில் பாலாஜி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது.
நானும் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். பின்னர் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இப்படி செய்வதால் முதலமைச்சருக்குத்தான் நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.
எம்.பி ஜோதிமணி மிகவும் பெருந்தன்மை வாய்ந்தவர். பெருந்தன்மையோடுதான் இந்த விஷயத்தை அணுகியிருக்கிறார். கூட்டணி தர்மம் என்பது வேறு. இருந்தாலும் எம்.பி.க்கான மரியாதையைம், மதிப்பையும் ஜோதிமணிக்கு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.