தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் நடந்த ஆய்வில் குழுவின் உறுப்பினர்களான வேல் முருகன், சிந்தனை செல்வன், சரஸ்வதி, மரகதம், காந்திராஜன், மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவர்கள், திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட 14 துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, “திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் ஆய்வு செய்தோம். அதில் ஆவினில் பால் தர கட்டுப்பாடு செய்ய 2016 ஆம் ஆண்டு ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கருவி வாங்கி உள்ளனர்.
அந்தக் கருவியை முறையாக பயன்படுத்தாமல் வீணடித்துள்ளனர். அது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
அது குறித்தும் விசாரணை செய்ய உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் நடந்த ஆய்வு எங்களுக்கு மன நிறைவாக உள்ளது. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் மிகவும் சிறப்பான திட்டமாக உள்ளது.
இதைச் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தேசிய, மாநில விருதுக்கு பரிந்துரைக்க உள்ளோம். கடந்த ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
உதாரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த ஆய்வும் செய்யாமல் அவசர கதியில் பல திட்டங்களை தொடங்கியிருக்கிறார்கள். அதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.
பல கோடி ஊழலும் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்து ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகை – காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
அதிலும் ஊழல் நடந்துள்ளது. அதை சரியாக செயல்படுத்தவே இல்லை. அ.தி.மு.க வின் பத்தாண்டுகால ஆட்சி இருண்ட ஆட்சியாக தான் இருந்தது.
10 ஆண்டுகளில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாமல் ஊழல் தான் அதிகம் நடந்துள்ளது. அ.தி.மு.க வினர் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
ஆனால் அவர்கள் ஆட்சி காலத்தில் காலாவதியான மருந்துகள் விநியோகிக்கப்பட்டு அதிலும் ஊழல் செய்துள்ளனர்.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது நிதி ஆதாரம் பூஜ்யமாக தான் இருந்தது.
அதை சிறிது சிறிதாக முதலமைச்சர் சரி செய்து வருகிறார். தமிழ்நாட்டில் காலி பணியிடங்கள் அதிகம் உள்ளது தான். அதை நிரப்பவும் பரிந்துரைத்துள்ளோம்.
நிதி நிலைமை சீராக முதலமைச்சர் அதையும் சரி செய்வார்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil