தொழில்முனைவோர்கள் உடனான கலந்துரையாடலில், ஜி.எஸ்.டி வரி குறித்து நகைச்சுவையாகப் பேசிய ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை போராட்டத்தை அறிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர்களுடான கலந்துரையாடல் கூட்டத்தில், பேசிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், “பன்னுக்கு ஜி.எஸ்.டி இல்லை, ஆனால், அதுக்குள்ள வைக்குற கிரீம்க்கு 18% ஜி.எஸ்.டி வரி. உங்க எம்.எல்.ஏ எங்க கடையின் ரெகுலர் கஸ்டமர் தினமும் வந்து சாப்பிட்டுவிட்டு சண்டை போடுகிறார்கள், ஸ்வீட்டுக்கு 5% ஜி.எஸ்.டி, காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி, கம்யூட்டரே கன்ஃபியூஸ் ஆகுது; ஒரே குடும்பத்துல இத்தனை வகையா ஜி.எஸ்.டி போட்டா சண்டை வருது. கஸ்டமர் பன் மட்டும் எடுத்துட்டு வாங்க, சீனி, ஜாம் நாங்க போட்டுக்கிறோம் என்கிறார்கள், கடை நடத்த முடியல மேடம். அதனால், ஜி.எஸ்.டி வரியை ஒரே மாதிரி ஆக்கிவிடுங்கள்” என்று அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு தமிழில் நகைச்சுவையாகப் பேசி கோரிக்கை விடுத்தார்.
ஹோட்டல் உரிமையாளர் நகைச்சுவையாகப் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. பலரும் மத்திய பா.ஜ.க அரசையும் ஜி.எஸ்.டி வரியையும் விமர்சித்தனர். இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேர்ல் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க எம்.பி.கனிமொழி, கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி செப்டம்பர் 14-ம் தேதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.
“நாளை(14.09.2024) சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.