இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்று செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரினா கடற்கரை வான்வெளியில், விமானப் படையின் சாகச நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்றது. லட்சக் கணக்கான மக்கள் மெரினாவுக்கு வந்து விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். அதே நேரத்தில், கடும் வெயில் தாக்கம் இருந்ததால், 230 பேர் மயங்கி விழுந்தனர். 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க. ஸ்டாலின் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும் என்று செல்வப் பெருந்தகை திங்கள்கிழமை அறிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது: “மத்திய அரசின் விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. லிம்கா சாதனையில் பதிவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டது. 15 லட்சம் மக்கள் கூடும் அளவிற்கு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. இதில் ஐந்து நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பாக அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.” தெரிவித்தார்.
மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் மரணம் ஏற்படாமல் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் எங்களது வேண்டுகோள். இது மிகப்பெரிய படிப்பினை. ஆனால், கடந்த காலங்களில் இந்திய விமானப்படை மாலை நேரங்களில்தான் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது, அவ்வாறு இருக்க சென்னையில் 11 மணியிலிருந்து 1 மணி வரை உச்சி வெயிலில் ஏன் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது? என்பதுதான் எங்களது கேள்வி.” என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, “15 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடினாலும், நெரிசலில் யாரும் இறக்கவில்லை. 4 பேர் நீர்ச்சத்து குறைபாட்டினால் இறந்துள்ளனர். ஒருவர் எப்படி இறந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். நெரிசல் ஏற்பட்டிருந்தால் காவல்துறை மீது குறை சொல்லியிருக்கலாம்? ஆனால் நெரிசலில் அவர்கள் இறக்கவில்லை. இதை யாரும் நியாயப்படுத்தி பேச முடியாது. கடந்துபோக முடியாது. தமிழக காங்கிரஸ் இந்த மரணங்களை அரசியலாக்க விரும்பவில்லை.” என்று கூறினார்.
மேலும், “எனினும் அரசு, விசாரணை ஆணையம் அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த நிகழ்விற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'நான், நீங்கள், மக்கள் என அனைவரும் பொறுப்பு” என்று செல்வப்பெருந்தகை கூறினார் .
பின்னர், “தமிழக காங்கிரஸ் சார்பில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும், உயிரிழந்த நபர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும்” என்று செல்வப்பெருந்தகை அறிவித்தார். மேலும், தமிழக அரசு உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“