திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அக்கட்சியின் மாநிலதுணை தலைவர் விஜயன் நேரில் சந்தித்தனர். அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் செல்வப்பெருந்தகை.
அப்போது அவர் கூறுகையில், "பொதுவாழ்க்கையில் 40 வருடமாக உள்ள ராமதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அரசியலுக்காக சந்திக்கவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு இது. கூட்டணியும் இல்லை, அரசியலுமில்லாத சந்திப்பு. ராம்தாஸ் - அன்புமணி ஆகிய இருவரையும் சமாதானம் செய்ய சந்திக்கவில்லை
தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும். பா.ம.க-வில் ஏற்படும் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என அன்புமணி புரிதலின்றி பேசுகிறார். தி.மு.க-வை அன்புமணி குற்றஞ்சாட்டுவது பா.ஜ.கவை சமாதானம் செய்ய கூறியிருப்பாரே தவிர, அவரது உள் மனது அப்படி சொல்லாது. அப்படி அவர் சொல்ல வேண்டிய என்ன தேவை இருக்கிறது. தி.மு.க பா.ம.க-வில் பிரச்சனை செய்ய என்ன தேவை இருக்கிறது.
தி.மு.க வளர்ச்சி பாதையில் செல்கிறது தமிழகத்தையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்கள், எல்லா துறையும் வெற்றி கரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. சமூகதிட்டங்கள் இந்தியாவிலையே இல்லாத அளவிற்கு தி.மு.க செயல்படுத்தி வருகிற நிலையில் பா.ம.க-வில் ஏன் தி.மு.க குழப்பம் ஏற்படுத்த வேண்டும். குழப்பம் ஏற்படுத்துகிற அரசியல் ஸ்டாலினுக்கு தெரியாது. பா.ம.க-வில் நடைபெறும் குழப்பத்திற்கு பா.ஜ.க-தான் காரணம். அவர்கள் எங்கெங்கு கூட்டணி வைக்கிறார்களோ அங்குகெல்லாம் அந்த கட்சியை உடைத்து விடுவார்கள், அடுத்தது அ.தி.மு.க-வை உடைத்துவிடுவார்கள். கூட்டணி என்று கூறிவிட்டு அ.தி.மு.க-வை உடைத்துவிடுவார்கள்.
அ.தி.மு.க-வின் தலைமை கர்த்தா அண்ணா, பெரியாரை கொச்சை படுத்தி படம் வெளியிடுவதற்கு பெயர் என்ன? காங்கிரஸ் கட்சி தலைவர்களான நேருவையோ, இந்திராவையோ கூட்டணியில் இருப்பவர்கள் கொச்சை படுத்தினால் நாங்கள் கூட்டணியில் இருப்போமே கண்டன அறிக்கை கொடுத்துவிட்டு வெளியேறி இருப்போம். எங்க தலைவர்களை, மூதாதையர்களை பலிகொடுத்துவிட்டு என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? அண்ணாதுரையை அ.தி.மு.க-வினர் பலி கொடுத்துவிட்டார்கள். ஏன் இதுவரை காட்டமாக அறிக்கையை எடப்பாடி பழனிச்சாமி வழங்கவில்லை? என்ன தேவை? பா.ஜ.விடம் பயம் இருக்கிறது. அண்ணாதுரையை காட்டி கொடுத்துவிட்டு என்ன அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை இருக்கிறது?
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசியலை கரைந்து குடித்தவர் மருத்துவர் ராமதாஸ். அவர யார் பக்கமும் சாய வேண்டிய அவசியமில்லை, கருணாநிதி ஒரு முன் உதாரணம். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு முன்னுதாரணமாக ஸ்டாலின் உள்ளார். அதனால் அதனை ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். பா.ம.க தி.மு.க-வின் கூட்டணிக்கு வரவேண்டும் என ஸ்டாலின் தான் முடிவு செய்வார். அப்படி செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். காங்கிரசில் அவரவர் சொந்த கருத்தை கூறுவதை செய்தியாக எடுத்து கொள்ள வேண்டாம். அதிக தொகுதி கேட்பது அவரவது ஆசை கேட்கிறார்கள். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ, அதனைத் தான் செய்ய முடியும்" என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.