பிரதமர் மோடியின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால், மோடியைப் பற்றி உண்மையாக நடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சத்யராஜ் பெரியார் குறித்து பேசுகிறார், நாத்திகம் பேசுகிறார், மோடியின் பயொ பிக்கில் நடிக்கிறாரா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:
“நடிகர் சத்யராஜ்ஜைப் பொறுத்தவரை பல படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் அவர் ஹீரோ. தந்தை பெரியார் படத்தில் பெரியாராக நடித்து வாழ்ந்து காட்டியவர். அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர் எண்ணம் உள்ளவர் அவர். மோடியின் பயோபிக்கில் நடிப்பது என்பது அவருடைய தொழில், அதில் எந்தவிதமான தவறும் கிடையாது. ஆனால், உண்மையான மோடியின் விஸ்வரூபமாக அவர் நடிக்க வேண்டும். உண்மையான பாசிச முகம் இருக்கிற மோடியை வெளிப்படுத்த வேண்டும். அவர் ஒப்பந்தம் போடும்போது, நான் நடிக்கிறேன். ஆனால், உண்மையான மோடியாக நடிப்பேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி. பெண்களுக்கு எதிராகப் பேசும் மோடி. ராமரைக் கையில் வைத்துக்கொண்டு அரசியல் பேசும் மோடி. இந்து மகாக் கடவுள்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒன்று என்று மிகப்பெரிய ஒற்றுமையோடு இருந்த காலங்களை எல்லாம் மறைத்து பிரிவினைவாதத்தை பேசுகிற மோடியாக அவர் நடிக்க வேண்டும். மோடியின் குணாதிசயங்கள், கடந்த பத்தாண்டுகளில் இந்த தேசத்திற்கு மோடி செய்த துரோகங்கள், எல்லாவற்றையும் அவர் வெளிப்படுத்த வேண்டும்” என்று வேண்டுக்கோள் விடுத்தார்.
அதே நேரத்தில், பிரதமர் மோடியின் பயோ பிக்கில் நடிகர் சத்யராஜ் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “மோடியைப் போல நடிப்பதற்கு 1 சதவீதம் கூட தகுதி இல்லாதவர் சத்யராஜ். அவருடைய எண்ணங்களே வேறு. இந்த படத்துக்கும் கதாபாத்திரத்துக்கும் சம்பந்தம் இல்லாதவர் சத்யராஜ். அதனால், படக்குழுவினர் தயவு செய்து அந்த படத்தில் மோடியாக சத்யராஜ்ஜை நடிக்க வைக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“