திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி எல்.கே.எஸ் மகாலில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் வரவேற்றுப் பேசினார்.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத், மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.
முடிவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். இதில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: “ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு இடத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுகிறது. மோதிலால் நேரு, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் காலத்தில் காங்கிரஸில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது.
அதன் பின்னர் தற்போது ராகுல் காந்தியின் காலத்தில் காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இன்றைக்கு பா.ஜ.க தலைவர்கள் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திக்கு முக்காடுகிறார்கள். அவர் சித்தாந்த ரீதியாக மக்களின் குரலாக தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்.
காங்கிரஸில் இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகள் காங்கிரஸில் சேர்கிறார்கள். ஆகவே, நாம் மலைக்கோட்டையில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது சாத்தியமாகும் எனப் பேசினார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“