Advertisment

ஜி.கே வாசனை மூப்பனார் ஆன்மா மன்னிக்காது: செல்வப் பெருந்தகை

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க-வுடன் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ள ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Selvaperunthagai K Annamalai GK Vasan

செல்வப்பெருந்தகை - அண்ணமலை, ஜி.கே. வாசன் Picture Source: Facebook

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க-வுடன் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவை எடுத்துள்ள ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisment

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன. அதே போல, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தனியாகவும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி தனியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. அதே போல, நாம் தமிழர் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கிறது. 

தமிழக பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் துரிதப் படுத்தி வரும் நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் முதல் கட்சியாக பா.ஜ.க-வுடன் கூட்டணியை அறிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் ஜி.கே. வாசன் எங்களை வழிநடத்துவார் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், “தமிழ்நாடு மக்களால் வெறுக்கப்படும் பா.ஜ.க-வுடன் த.மா.கா கூட்டு சேர்ந்துள்ளது. இந்த முடிவை எடுத்துள்ள ஜி.கே. வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். 

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது.

மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். 

அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் டெல்லிக்கு த.மா.கா.வில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று அன்னை சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார். 

ஏப்ரல் 1999-ல் அன்று பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரசில் ப. சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள். 

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அன்று வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பா.ஜ.க.வில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார். 

காங்கிரஸ் இயக்கத்தில் மக்கள் தலைவர் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி வழங்கியிருக்கிறார். 

இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது.” என்று செல்வப்பெருந்தகை த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனைக் கடுமையகாச் சாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Selvaperunthagai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment