தமிழகத்தில் எந்த கட்சியும் தனியாக நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல்தான் இருக்கிறது என்றும் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில், போட்டியிட்ட அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, வயநாட்டு மக்களுக்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைத்த ஜார்க்கண்ட் மக்களுக்கும் நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இனிப்புகள் வழங்கினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “2006-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், தி.மு.க.வுக்கு தனி மெஜாரிட்டி இல்லை. அந்த சமயத்தில், தமிழகத்திற்கு கருணாநிதியின் ஆட்சி தேவை என்றும், பெருந்தலைவர் காமராஜர் போல் தமிழக மக்களுக்கு கருணாநிதி பல நல்ல திட்டங்களை கொடுப்பார் என்றும் கருதி, தார்மீக அடிப்படையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தி.மு.க.வுக்கு ஆதரவு வழங்கினார்.” என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெர்ண்நகை, “தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. ஒரு கட்சி பல தொகுதிகளில் வெற்றி பெறலாம், ஆனால், தனித்து நின்று முழு மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? என்றால் அது கேள்விக்குறிதான். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் நிலையை பார்க்கும்போது, யாரும் இங்கு தனியாக நின்று ஆட்சி அமைக்க முடியாத சூழல்தான் இருக்கிறது.” என்று செல்வபெருந்தகை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“