முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தி பிறந்த தினத்தை தமிழக காங்கிரஸ் கட்சியினர் விமரிசையாக கொண்டாடி வாருகிறார்கள். இந்நிலையில், இந்த நிகழ்வை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செல்வப் பெருந்தகை, "விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார். எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டிவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது, அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
இதனிடைய, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "காவல்துறை அவருக்கு அனுமதி அளித்துள்ளது எனவே அவர் செல்கிறார். அங்க இருக்கிற மக்கள் பாதிக்கக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு" என்று செல்வப்பெருந்தகை கூறினார்.