Advertisment

ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த ஆளுனர்: தலைவர்கள் ஹாட் ரியாக்ஷன்

தற்போது அவர் மீது பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. தற்போது அவர் மீது பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

Advertisment

அவரது செயல்பாடுகள், பேச்சுகள் நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் அரசியலில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருப்பதாக தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுவதையும், தேவையற்றவற்றைப் பேசுவதையும் ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று தொழிலதிபர்களை சந்தித்து பேசியதை பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (05.06.2023) உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது, அந்நிய முதலீடுகளை பெறுவதற்காக வெளிநாடு சென்ற மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தை தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். இவரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சமீபத்தில் குழந்தைத் திருமணம் பற்றி பேசிய ஆளுநர் ரவி அவர்கள், தமிழ்நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு குழந்தைத் திருமணம் குறித்து சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள் என்றும், உண்மையில் சிதம்பரத்தில் குழந்தைத் திருமணங்கள் நடக்கவில்லை என்றும் தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

ஆனால், தற்போது சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால், மூக்குடைபட்ட நிலையில் உள்ள ஆளுநர், அதை மடைமாற்றம் செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு பயணம் பற்றி விமர்சித்துள்ளார். ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனிற்கும் எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர் இவ்வாறு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சித்தலைவர் போல செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த நிலை பாஜகவிற்கு எதிர்நிலை கொண்ட கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் தொடர்கிறது.

ஆளுநரின் செயல்பாடுகள், பேச்சுகள் நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் அரசியலில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று செயல்படுவதையும், தேவையற்றவற்றைப் பேசுவதையும் ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் பதவிக்கு தகுந்த மாதிரி அவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்", என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை கவர்னர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அத்துமீறி பேசி வருகிறார். அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் கவர்னர் ரவி. கவர்னர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். சிதம்பரம் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் கவர்னர் இப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன்

முதலமைச்சர் மீதான விமர்சனம் பிரதமர் மீதான விமர்சனமாக பார்க்க வேண்டும். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். சர்ச்சைகளுக்கு கவர்னர் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை அரசியலுக்காக பயன்படுத்தியுள்ளார்.

2021-22ம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் 4,79,213 நிறுவனங்கள், 36,63,938 பணியாளர்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது; 2022-23-ல் நிறுவனங்கள் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை.

அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவை; டாப் 100 கல்லூரிகளில், 30 தமிழ்நாட்டில் இருப்பவை.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதை ஏற்க முடியாது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்வரின் ஜப்பான் பயணத்தின் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது", என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார்.

ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டத்திற்குரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நக்லாந்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்", என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Governor Rn Ravi Vaiko Thangam Thennarasu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment