Advertisment

ரவுடிப் பட்டியலில் எனது பெயரா? அண்ணாமலைக்கு செல்வப் பெருந்தகை சவால்

“நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரத்தை காட்ட வேண்டும், இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன்” என்று செல்வபெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
selva malai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை - தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியது சர்ச்சயை ஏற்படுத்திய நிலையில், “நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரத்தை காட்ட வேண்டும், இல்லாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன்” என்று செல்வபெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Advertisment

இதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, செல்வப்பெருந்தகை மீதான வழக்குகள் பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பின்வாங்கப்போவதில்லை என்று பதிலளித்துள்ளார். இதற்கு, செல்வப் பெருந்தகை என் வழக்கின் வரலாறு அரைகுறை அண்ணாமலைக்கு தெரியுமா என்று கேட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு செல்வப் பெருந்தகை “நான் ரவுடி என்பதற்கு அண்ணாமலை ஆதாரத்தைக் காட்ட வேண்டும், இல்லாவிட்டால் ம்ன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடருவேன்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது: “அண்ணாமலை என்ன ஐ.பி.எஸ்., படிச்சாரு, என்ன சட்டம் படிச்சாரு. அண்ணாமலை ஐ.பி.எஸ்., படித்தாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நான் ரவுடி என்பதற்கு ஆதாரத்தை அண்ணாமலையால் காட்ட முடியுமா?. தலித் சமூகத்தை சேர்ந்த என்னை பற்றி அவதூறு பரப்பினால் சிறை செல்ல நேரிடும். இந்த நாடும், சட்டமும், நீதிமன்றமும், போலீசாரும் அண்ணாமலைக்கு சொந்தம் என நினைக்கிறார். நான் வழக்கு தொடர்ந்தால் அண்ணாமலைக்கு முன் ஜாமின் கிடைக்குமா?.

ஆணவமும், திமிரும் அண்ணாமலைக்கு எங்கே இருந்து வந்தது. தலித் சமூகம் மற்றும் ஏழை, எளிய மக்கள் என்றால் அண்ணாமலைக்கு யார் என்று தெரியாது. தமிழக பா.ஜ.க-வில் உள்ளவர்கள் மீது மொத்தம் 834 வழக்குகள் உள்ளது. இதில் 124 குற்ற வழக்குகள். ஆம்ஸ்ட்ராங் கொலையை உலகம் முழுவதும் கொண்டு செல்வேன் என அண்ணாமலை சொல்கிறார். துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசும் அண்ணாமலைக்கு நாகரீகம் இருக்கிறதா?.

வாய் இருக்கிறது என்பதற்காக அவதூறாக பேசினால், சட்டம் பாயும் என அண்ணாமலைக்கு தெரியாதா?. அரைகுறையாக அரசியல் படித்துவிட்டு பேசும் அண்ணாமலை என்ன பேசுகிறோம் என யோசித்து பேச வேண்டும். பா.ஜ.க ஊழலிலேயே திளைத்து, நிதி நிறுவனங்களை அவர்களுக்கு வேண்டிய ஆட்கள் மூலம் தங்கள் வசம் பயன்படுத்திக் கொள்வது, ஆசை வார்த்தை காட்டி ஏழை எளிய கிராமப்புற மக்களை ஏமாற்றுபவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது.

அண்ணமலை என்னை ஹிஸ்டரி சீட்டர், ரவுடி சீட்டர் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.” என்று பதிலளித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். 

மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை. 

ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி 

2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e) 

2003வழக்கு எண் 136/2003இபிகோ 307 – கொலைமுயற்சி

2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்

2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்

2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. 

இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலைமிரட்டல்

கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.     

குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள செல்வப்பெருந்தகை, “எனது வழக்கின் வரலாறு அரைகுறை அண்ணாமலைக்கு தெரியுமா?” என்று கேட்டு எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: “2003-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்தபோது, இங்கிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.ஐ சார்ந்த தலைவர்கள் புகார் அளித்து என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு உண்மைக்கு புறம்பான வழக்குகளைப் பதிவு செய்து என்னை சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைத்தவுடன் நான், நீதிமன்றத்தில் எந்த வழக்கில் என்னை சிறையில் அடைத்தார்களோ அந்த வழக்குகளை தீவிரமாக விசாரிக்க வேண்டும், நல்ல அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும், உயரதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும், குறிப்பாக சி.பி.சி.ஐடி, அல்லது சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் நானே முன்வந்து ஒரு மனு கொடுத்தேன். அதை சி.பி.ஐ-க்கு மாற்றலாம் என்று நீதிபதிகள் சொன்னபோது,  தமிழ்நட்டு காவல்துறையும் அன்று இருந்த அரசு வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளிடம் சொன்ன வார்த்தைகள்,  ‘நாங்கள் வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். அல்லது நீங்களே அதை ரத்து செய்துவிடுங்கள்” என்று ஒப்புதல் கொடுத்தார்கள். இதுதான் என்னுடைய வரலாறு. நான் மன்னிப்பு கேட்கவில்லை. நான் என்னுடைய வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ளவில்லை. நான் என்னுடைய வழக்கை ரத்து செய்யக் கோரி அனுமதி கேட்கவில்லை. அவர்களே முன்வந்து ரத்து செய்தார்கள். உயர்நீதிமன்றம் என்னிடம் கேட்கும்போது சொன்னேன், என்னுடைய வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டாம், என்னுடைய வழக்கை அவர்கள் திரும்ப நடத்த வேண்டும். வழக்கை நிறுத்தக் கூடாது, நான் நிரபராதி என்று அவர்கள் சொல்ல வேண்டும் என்றேன். ஆனால், என் மீது வழக்கு போட்டவர்கள் என்ன சொன்னார்கள், நாங்கள் வழக்கை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் அல்லது நீங்களே அந்த வழக்கை ரத்து செய்துவிடுங்கள் என்றார்கள். இதுதான் என்னுடைய வரலாறு. என்னுடைய பாரம்பரியம், என்னுடைய பின்னணி, நான் வந்த வழி. ஆனால், உங்களுடைய (அண்ணாமலை) பின்னணி, உங்களுடைய வரலாறு, உங்களுடைய பாரம்பரியம் அப்படிப்பட்டதில்லை. மன்னிப்பு கேட்டவர்கள், மண்டியிட்டவர்கள், இந்த உயர்நீதிமன்ற ஆணையைப் படியுங்கள். உயர்நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது. வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள். எதையும் தெரிந்துகொள்ளாமல் அரைகுறையாக அண்ணாமலை பேசுவது எந்த விதத்தில் நியாயம்” என்று அண்ணாமலையை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Selvaperunthagai Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment