/indian-express-tamil/media/media_files/2025/09/24/dinakaran-sengottaiyan-2025-09-24-19-41-16.jpg)
அதிமுகவில் நிலவிவரும் ஒற்றைத் தலைமை மோதலும், கட்சிக்குள் உருவாகியுள்ள பிளவுகளும் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாக இருந்து வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘அதிமுக ஒருங்கிணைப்பு’ என்ற கோரிக்கை, இப்போது கட்சியின் மூத்த தலைவர்களாலும் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன் அறிவிப்புடன் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், “அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான பணியை அடுத்த 10 நாட்களில் தொடங்க வேண்டும். ஒருவேளை அது நடக்கவில்லை என்றால், நானே அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வேன்” என்று அவர் அதிரடியாக அறிவித்தார். அதேசமயம், கட்சியில் யாரை சேர்க்கலாம் என்பதை பொதுச் செயலாளரே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டது, அவரது நிலைப்பாட்டில் ஒருவித முரண்பாட்டை வெளிப்படுத்தியது.
செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிவடைந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி வரை, எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், அன்று சென்னை வடபழனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், செங்கோட்டையனின் கருத்துக்கு நேரடியாக பதிலடி கொடுத்தார். “கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்களையும், ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்றவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். இது, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மறைமுகமாக சுட்டிக்காட்டியதோடு, ஒருங்கிணைப்பு முயற்சிகளை அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையும் தெளிவாக உணர்த்தியது.
இந்தக் கூட்டத்திற்கு மறுநாள், செப்டம்பர் 16ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். நிர்வாகிகள் புடைசூழச் சென்ற அவர், சுமார் 20 நிமிடங்கள் அமித்ஷாவுடன் தனிப்பட்ட முறையில் சந்திப்பு நடத்தியது, டெல்லி தலைமைக்கும், அதிமுகவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதாகக் கருதப்பட்டது. செங்கோட்டையன் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவர் சென்னையில் முகாமிட்டிருந்தார். இந்தச் சூழலில், இன்று அவர் திடீரென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், எனது சொந்த வேலையாகவே சென்னைக்கு வந்தேன், யாரையும் பார்க்கவில்லை. அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை தவிர வேறு எதையும் செய்யவில்லை. நல்லதே நடக்கும் என்பதே என் நோக்கம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தினகரனை சந்திக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.