/indian-express-tamil/media/media_files/2025/09/08/sengottaiyan-2025-09-08-08-57-10.jpg)
மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்: செங்கோட்டையன் பேட்டி
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மன அமைதிக்காக ஹரித்துவார் செல்வதாக கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தன்னை சந்தித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் கூறியது சரி என்றே கூறியதாகவும் தெரிவித்தார்.
பின்னணி:
அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இதன் காரணமாக, கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் பதவியைப் பறித்தார். தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா உள்ளிட்டோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
செங்கோட்டையன் பேட்டி:
இந்நிலையில், டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பதவி நீக்கம் குறித்து அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கியது குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்றார்.
பயணம் குறித்த கேள்விக்கு, நான் மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன். ராமரைக் காண செல்கிறேன். மனது ரிலாக்ஸ் ஆக வேண்டும் என்பதால் செல்கிறேன். நான் டெல்லியில் யாரையும் சந்திக்க செல்லவில்லை. இங்கு இருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள் வருகின்றன.
ஆதரவாளர்கள் குறித்த கேள்விக்கு, கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என்னை சந்தித்து, நான் கூறியது சரி என்று கூறுகிறார்கள். தொண்டர்களும் இதற்கு மாறுபட்ட கருத்து கூறவில்லை. எனக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். நான் சொன்னதுதான் அனைவரது மனதிலும் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து அழைப்பு வந்ததா என்று கேட்கிறீர்கள். அதற்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. மூத்த தலைவர்கள் யாரும் என்னை சந்திக்கவில்லை. அது சஸ்பென்ஸ் என்றார்.
டெல்லி சந்திப்பு குறித்த கேள்விக்கு, நான் டெல்லியில் யாரையும் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பீர்களா என்று கேட்கிறீர்கள். நான் காணச் செல்வது கடவுள் ராமரை மட்டும்தான். செப்.9-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக நான் கூறவில்லை. நான் கோயில் சென்று அமைதியாக இருக்கவே செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.