அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தற்போது கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
அண்மையில், அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, விவசாயிகள் சங்கம் சார்பில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்னூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இதற்கு, “இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் இல்லை. இதனால், அந்த விழாவுக்கு நான் செல்லவில்லை” என்று கூறியது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய செங்கோட்டையன், “அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் பெயர் இல்லை என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான். அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள்.
நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்.ஜி.ஆர். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும்தான். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது” என்று பேசினார்.
இந்நிலையில், அ.தி.மு.க தோல்விக்கு துரோகிகளே காரணம் என்றும் அந்த துரோகிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அத்தானியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: “இந்த முறை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். 2026-ல் அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று பேசினார். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேச்சு அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.