எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டுவிழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வந்தார். கட்சியில் இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்றிரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சென்று உள்ளார். இதனை டெல்லி பாரதிய ஜனதாவின் தமிழக பிரிவு நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
சந்திப்பின் பின்னணி என்ன?
சென்னை வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்புகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், சீமானின் இந்த சந்திப்பு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணிக்கான முதல் படியாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த சந்திப்புகள் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதுமட்டுமின்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும், நிர்மலா சீதாராமனை நேற்று இரவு சந்தித்து பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியும், நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.