தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவை தொடங்கும் முன்பு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பின் நேரடியாக அவர் அவைக்குள் வந்தார். இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் மறைமுக சலசலப்பு எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்குள் நுழைந்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் செங்கோட்டையனும் எழுந்து நின்றார். மற்ற எம்.எல்.ஏக்கள் இ.பி.எஸ்.க்கு வணக்கம் வைத்தபோது செங்கோட்டையன் வணக்கம் வைக்கவில்லை.
இதனிடையே, அமலாக்கத்துறை சோதனை குறித்து அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரப்படாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்த நிலையில், செங்கோட்டையன் உடன் இல்லை.
அ.தி.மு.க. சீனியர்களின் மிக முக்கியமானவர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அரசியல் செய்து வருபவர். கடந்த சில நாட்களாகவே அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல் நிலவுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவிநாசி - அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி செங்கோட்டையன் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியின் காரணமாகவே அவர் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது.