அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அன்று முதல் செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதை, அவர் தவிர்த்தார்.
இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்துள்ளார். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார்.
பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். 2வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளது பேசுபொருளாகி உள்ளது.