Jayalalitha | Fali S Nariman | பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ் நாரிமன் இன்று (பிப்.21,2024) காலை காலமானார். அவருக்கு வயது 95.
பிரபல வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். மும்பையிலுள்ள அரசு சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார்.
பின்னர் 1972ல் இந்திரா காந்தி அரசால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (ஏஎஸ்ஜி) நியமிக்கப்பட்டார். அதன்படி, 1972 முதல் 1975 வரை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டராக இருந்தார்.
எனினும், இந்திரா காந்தி தேசிய அவசரநிலையை விதித்தபோது நாரிமன் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன் மற்றும் 2007 இல் பத்ம விபூஷண் வழங்கப்பட்டது.
பாலி நாரிமன் 1971 முதல் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும், 1991 முதல் 2010 வரை இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு 2018 இல் லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது வழங்கப்பட்டது. அவர் 1999 முதல் 2005 வரை ராஜ்யசபாவின் நியமன உறுப்பினராகவும் இருந்தார்.
அவரது மகன் ரோஹிந்தன் நாரிமனும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உள்ளார்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான அரசியலமைப்பு வழக்குகளில், பல முன்னணி அரசியல் தலைவர்களின் வழக்குகளை பாலி நாரிமன் வாதிட்டுள்ளார். அந்த வகையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை வாதாடிய பாலி நாரிமன், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளசாசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட்டார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவரது வாதங்கள் முக்கிய காரணமாக அமைந்தது. நாட்டையே உலுக்கிய போபால் விஷவாயு வழக்கில் யூனியன் கார்பைடுக்காக ஃபாலி எஸ் நாரிமன் வாதிட்டார். ஆனால் சமீபத்தில் தான் தவறு செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஃபாலி எஸ் நாரிமன் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“