தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சண்முக சுந்தரம் யார்? பின்னணி என்ன?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள சண்முக சுந்தரம் நீதித்துறைக்கு புதியவர் ஒன்றும் அல்ல. 1991 – 96 ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அன்றைக்கு இளம் வழக்கறிஞராக இருந்த ஆர்.சண்முக சுந்தரத்தின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் அரசு துறை நிர்வாகங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். ஆட்சி மாறும்போது தலைமைச் செயலாளர், டிஜிபி, ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு தலைமை வழக்கறிஞர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும், இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பலரும் நன்கு அறியப்பட்ட ஆளுமைகளாக இருப்பது அரசியல் களத்திலும் அரசு நிர்வாக தளத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்றதும் முதல்வரின் தனிச்செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டனர். உடனடியாக தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு பன்முக ஆளுமையான இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடனே தமிழக அரசின் தலைமை வழகறிஞராக இருந்த விஜய் நாராயணன் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள சண்முக சுந்தரம் நீதித்துறைக்கு புதியவர் ஒன்றும் அல்ல. 1991 – 96 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அன்றைக்கு இளம் வழக்கறிஞராக இருந்த ஆர்.சண்முக சுந்தரத்தின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதே வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அறியப்பட்டார்.

இதற்கு காரணம், ஜெயலலிதா மீது திமுக சார்பில் தொடரப்பட்ட டான்சி நில ஊழல் வழக்கில் வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகவிருந்த நிலையில், 1995ம் ஆண்டு இதே போன்ற ஒரு மே மாதத்தில், ஒரு ரவுடிக் கும்பல் அவருடைய வீட்டுக்குள் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சண்முக சுந்தரம் படுகாயம் அடைந்தார். வழக்கறிஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து அன்றைக்கு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தார் ஆர். சண்முக சுந்தரம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட வெல்டிங் குமார் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதற்குப் பிறகும், அஞ்சாமல் ஜெயலலிதாவுக்கு எதிரான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, லண்டன் ஹோட்டல் வழக்கு என பல வழக்குகளில் சண்முக சுந்தரம் ஆஜரானார். அதுமட்டுமில்லாமல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகி வாதாடியுளார். அதோடு, பேரறிவாளனை பரோலில் விடுப்பு அளிப்பது தொடர்பான வழக்கிலும் ஆஜராகி வாதாடியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம் இதற்கு முன்பு, 1996 -2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

1953ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த சண்முக சுந்தரத்தின் தந்தை எஸ்.ராஜகோபாலும் ஒரு பிரபலமான வழக்கறிஞர். அவர் சிபிஐ-க்கான சிறப்பு வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். ஆர்.சண்முகசுந்தரம் சட்டம் படித்து முடித்தவுடன் 1977ம் அண்டு மூத்த வழக்கறிஞரான நடராஜனிடம் ஜூனியர் வழக்கறிஞராக பயிற்சி செய்தார்.

வழக்கறிஞர் சண்முக சுந்தரம் வழக்கறிஞராக மட்டுமில்லாமல், 2002-ம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்வுசெய்யப்பட்டு 2008-ம் ஆண்டு வரை அவர் எம்.பி-யாக இருந்தார். 40 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக பணி அனுபவமுள்ள சண்முக சுந்தரம் அவருடைய உழைப்புக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் தற்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Senior advocate r shanmuga sundaram appointed as advocate general of tamil nadu

Next Story
ஞாயிற்றுகிழமைகளிலும் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com