காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானார். மறைந்த குமரி ஆனந்தன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்.
குமரி அனந்தன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன் என்றும் குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர் காமராசரின் அடியொற்றி, காங்கிரஸ் பேரியக்கத்துக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட அவரது மறைவு தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என்றும் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மிகச்சிறந்த இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசைக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு, தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் பதிவில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய குமரி அனந்தன் காலமானார் என்பது செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். குமரி ஆனந்தனின் மறைவு தமிழ் நாட்டுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
”தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், தகைசால் தமிழர், இலக்கிய செல்வர் குமரி அனந்தன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி அரசியல் பயணத்தைத் தொடங்கிய குமரி அனந்தன் தமிழக அரசியல் களத்தில் தனித்ததோர் இடத்தை பெற்றிருந்தவர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர். மது ஒழிப்பிற்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, 5 முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.