தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்பது கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நாளை (செப்டம்பர் 28) நிச்சயம் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்பதும், உதயநிதி துணை முதல்வராகிறார் என்பதும் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்தநிலையில், மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் நாளை மாலை 3.30 மணிக்கு அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நாளை பிற்பகல் 3.30 க்கு அரங்கேற இருக்கிறது. மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிதாக மூன்று பேர் அமைச்சராக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் கடந்த ஐம்பதாண்டு கால வரலாற்றில் முதல் முறையாக உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். நிஜமாகவே சமூக நீதியை வலுப்படுத்தும் ஏற்பாடு இது. இந்தப் புரட்சிக்கு சமீப பத்தாண்டுகளில் வித்திட்டவர், மறைந்த ஜெயலலிதாதான். பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பள்ளிக்கல்வி அமைச்சராக்கியவர் அவர்.
சிறுபான்மை சமூகத்தவர் கவலைப்பட ஒன்றுமில்லை. ஒருவர் போய் ஒருவர் வருகிறார். பால் வளம் கைமாறுகிறது. சுற்றுச்சூழல் இன்னொருவருக்கு கூடுதலாகப் போகிறது. புதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. உதயநிதிக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்…? இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்..? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன. சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.
“அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்” என்று சொல்லிவிட்டார் உதயநிதி. வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள். அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள்.
ஆனாலும், முதல்வர் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை உதயநிதிக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள்.” இவ்வாறு எஸ்.பி.லட்சுமணன் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.