யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்தது யார்? என சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் புகார் மனு அனுப்பியுள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் குறித்தும், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4 ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி போலீஸார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் இருப்பதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதன்பேரில் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே தன் மகன் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.
அப்போது, "இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இரண்டு அதிகாரமிக்க நபர்கள் என்னிடம் பேசினார்கள். அவர்களின் எண்ணம் ஈடேறக்கூடாது என்பதற்காகவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டேன். என்னிடம் பேசப்படாவிட்டால், அட்வகேட் ஜெனரல் எதிர்பார்த்தபடி வழக்கமான விசாரணை நடவடிக்கையை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்" என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.
இந்த விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த அந்த இரண்டு நபர்கள் விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறுகையில், “உயர்பொறுப்பில் உள்ள இரு நபர்கள் என்னை சந்தித்தார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள் என நீதிபதி சொல்வது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிக்கே அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு இருப்பவர்கள் யார். அவர்கள் அவ்வாறு செய்தது நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டதாகும். எனவே அந்த இருநபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். மேலும், சி.பி.ஐ விசாரணை கோரியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“