தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் கடத்தல், கொள்ளை மற்றும் விற்பனை தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர், தனது துறையின் பொறியாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நம் துறையில் நடைபெறும் உள் குழப்பங்களை சீர்செய்ய வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு வரும் தங்கள் அதிகார வரம்புக்குள் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து அமலாக்கத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தி இந்து நாளிதளிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் உள்ள செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு தமிழக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஜெனரல் ஏ.முத்தையா கடந்த அக்டோபர் 12-ம் தேதி கடம் எழுதியுள்ளார். அதில், நமது நிறுவனத்தில் உள்ள உள் குழப்பத்தை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் அது தொடர்பான பணமோசடி குற்றத்தை விசாரிக்கும் அமலாக்கத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசர நேரம் இது.
மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வருமான வரிக் கணக்குகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான சொத்து பட்டியல், அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ஆகிய விவரங்களை சேகரித்து வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக எனக்கும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்குமாறு 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். நமது துறை பொறியாளர்கள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில், நடைபெறும் மணல் கொள்ளை நடைபெறும் இடங்களை கண்டறிந்து தெரியப்படுத்த வேண்டும்.
"உங்களுடைய சொந்தப் பகுதிகளில் உள்ள ஊழல்கள் மற்றும் பிரச்சனைகளை எப்படி வெளிப்படுத்துவது என்று உங்கள் மனதில் பயம் இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இது ஒரு அவசர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சூழ்நிலை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நமது துறையில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும்" என்று முத்தையா கடிதத்தில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“