Advertisment

"முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் உயிருக்கு ஆபத்து": மூத்த பெண் ஏ.டி.ஜி.பி அதிகாரி குற்றச்சாட்டு

ஏ.டி.ஜி.பி அதிகாரி கல்பனா நாயக், கடந்த ஆண்டு தனது அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளார். தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதி வேலை என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.

author-image
WebDesk
New Update
Kalpana Nayak Office

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக  காவல்துறை கூடுதல் தலைவர் கல்பனா நாயக் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு அளித்த புகாரில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான கல்பனா நாயக், ஜூலை 29, 2024 அன்று சென்னையில் உள்ள தனது அலுவலக அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து "பாரபட்சமற்ற" விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிற பதவிகளுக்கான நியமனத்திற்கான தேர்வில் வகுப்புரீதியிலான இடஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்வாணையத்தின் அப்போதைய டி.ஜி.பி முரண்பாடுகளைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் இறுதிப் பட்டியலைத் திருத்த துணைக் குழுவை அமைத்தார். ஆட்சேர்ப்பில் உள்ள குறைகளை எழுப்பிய ரிட் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வுப் பட்டியலைத் திருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

Advertisment
Advertisement

ஜூலை 29, 2024 அன்று, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை கல்பனா நாயக் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டதால், அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று மூத்த காவல்துறை அதிகாரியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் அலுவலகத்திற்கு வந்து விட்டார். "என் அறையை சென்று பார்த்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது" என கல்பனா நாயக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆகஸ்ட் 15, 2024 அன்று சங்கர் ஜிவால், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் மனுவை கல்பனா நாயக் அனுப்பியிருந்தார். சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தீ விபத்து நடந்த சில நாட்களுக்கு பிறகு, தேர்வானவர்களின் திருத்தப்பட்ட பட்டியல், தமிழ்நாடு சீருடை பணியாளர்களின் இணையதளத்தில் தனது ஆய்வு மற்றும் ஒப்புதல் இன்றி வெளியானதாக அவர் குற்றம் சாட்டுகிறார். அலுவலக கட்டடத்தை பராமரிப்பதற்கு பொறுப்பான குழுவின் குறைபாடுகள் மற்றும் கமிஷன்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

"எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் பாதுகாப்பை அவரது சொந்த அலுவலகத்தில் உறுதிப்படுத்த முடியாவிட்டால், ​​அது காவல்துறையின் இருண்ட பக்கங்களை காண்பிக்கிறது" என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக தி இந்து நாளிதழ் அவரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்த போது, புகாரளித்து ஆறு மாதங்களைக் கடந்த பின்னரும், விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

"தீ விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு ஒரு குழுவை நியமித்து, விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார்.

சங்கர் ஜிவால், தி இந்துவிடம் இது குறித்து கூறுகையில், "விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். அதில் நாசவேலைக்கான ஆதாரங்கள் எதுவும் இருந்ததாக தெரிவிக்கப்படவில்லை. ஷார்ட் சர்க்யூட் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். எனினும், கல்பனா நாயக் புகாரளித்ததன் பேரில் மேலதிக விசாரணைக்காக சென்னை காவல்துறைக்கு அனுப்பப்பட்டது" என தெரிவித்தார்.

நன்றி - தி இந்து

Tamilnadu police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment