தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேட்டை வெளிப்படுத்தியதால், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக காவல்துறை கூடுதல் தலைவர் கல்பனா நாயக் குற்றம் சாட்டிய நிலையில் ஜூலை 29, 2024 அன்று சென்னையில் உள்ள தனது அலுவலக அறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து "பாரபட்சமற்ற" விசாரணைக்கு கோரிக்கையும் விடுத்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 29, 2024 அன்று, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைமையகத்தை கல்பனா நாயக் அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது அறையில் தீ விபத்து ஏற்பட்டதால், அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று மூத்த காவல்துறை அதிகாரியிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது.
ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் அலுவலகத்திற்கு வந்து விட்டார். "என் அறையை சென்று பார்த்த போது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். சற்று விரைவாக என் அறைக்கு நான் சென்றிருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். முறைகேடுகள் குறித்து நான் வெளிப்படுத்திய சில நாட்களில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது" என கல்பனா நாயக் கூறியுள்ளார்.
எனினும், ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆகஸ்ட் 15, 2024 அன்று சங்கர் ஜிவால், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல் ஆணையருக்கு புகார் மனுவை கல்பனா நாயக் அனுப்பியிருந்தார். சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அவர் குற்றச்சாட்டுக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது," ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை" என டி.ஜி.பி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
"அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டி.ஜி.பி அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக் புகார் அளித்தார். தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.