scorecardresearch

நீல திமிங்கலம் விளையாட தூண்டினால் தண்டனை : தமிழக அரசு அறிவிப்பு

நீல திமிங்கலம் விளையாட்டை விளையாட யாராவது தூண்டினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.

Blue whale - tamilnadu government

நீல திமிங்கலம் விளையாட்டை விளையாட தூண்டினால் தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நீலத் திமிங்கில சவால்” என்ற பெயரில் நேரலை விளையாட்டு ஒன்று இணையதளத்தில் பரவி வருகின்றது. அதை விளையாடுபவர்களைச் சவால்கள் என்ற பெயரில் தூண்டி விட்டு அவர்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தி, கடைசி கட்ட சவாலாக விளையாடுபவரையே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு இந்த விளையாட்டு இட்டுச் செல்கிறது. இந்தியா உட்பட உலக நாடுகளில் தற்கொலை இறப்புகள் இவ்விளையாட்டால் நிகழ்ந்து வருகிறது. அண்மையில் மதுரை மாவட்டத்தில் ஒரு இளைஞனின் உயிர் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

“நீலத் திமிங்கில சவால்” என்ற விளையாட்டானது இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ விளையாட்டு களஞ்சியத்திலிருந்து எளிதாகப் பதிவிறக்கம் செய்யக்கூடிய, தொழில்நுட்ப ரீதியான செயலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டல்ல. சமூக ஊடக நிர்வாகம் அளிக்கும் நேரலை விளையாட்டுக் குழுமங்கள், குறுஞ்செய்தி மையங்கள் மற்றும் இதர நேரலை சமூக தகவல் வழிமுறைகள் உள்ளிட்ட பணிகளைச் செய்து முடிக்கக்கூடிய விளையாட்டு மட்டுமின்றி, வாலிப வயதினரை வேண்டுமென்றே தூண்டிவிட்டு 50 நாட்களுக்கான ஒரு தொடர் பணிகளை செய்து முடிக்கக் கட்டளையிட்டு, இறுதியில் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்குக் கொண்டு செல்லும் விளையாட்டாகும்.

ஓர் அமைதியான இல்லம், ஒரு திமிங்கிலக் கடல், அதிகாலை 4.20 மணிக்கு என்னை எழுப்பு போன்ற பல்வேறு பெயர்களில் இவ்விளையாட்டு புழக்கத்தில் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.

இவ்விளையாட்டைப் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் அல்லது அதைப்போன்ற சாதனங்களைப் பயன்படுத்தித் தான் விளையாட முடியும்.

12 முதல் 19 வயதுடைய சிறார்கள்தான் இணையதளத்தில், அதிகபட்சமாக, நீலத்திமிங்கில சவால் மற்றும் அதுபோன்ற இன்னும் பிற விளையாட்டுக்களால் ஈர்க்கப்படும் வயதினராக உள்ளனர் என்று தெரிய வருகிறது. இது போன்ற விளையாட்டுக்களை நேரலையில் விளையாடும் சிறார்கள் தனிமையை விரும்புபவர்களாகவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்திக் கொள்பவர்களாகவும், வீட்டில் இருந்து வெளியே ஓடிவிடுவது பற்றி அடிக்கடி பேசுபவர்களாகவும், மரணம் குறித்து விவாதிப்பவர்களாகவும் இருப்பார்களென மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய சிறார்களின் உணவு சாப்பிடும் முறையிலும், தூங்கும் பழக்கத்திலும் மாறுபாடுகள் தென்படும்.

எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் சிறார்களின் மனநிலையில் ஏதாவது வித்தியாசமான மாற்றம் தெரிகிறதா என்றும், மற்றவர்களுடன் பேசுவது குறைந்து வருகிறதா அல்லது முற்றிலும் நின்றுபோகிறதா என்றும், கல்வியில் நாட்டமின்றி, மதிப்பெண்கள் குறைந்துள்ளனவா என்றும், அவர்களது நடத்தையைக் கூர்ந்து கவனித்து வரவேண்டும்.

ஏனென்றால், அத்தகைய போக்குகள் நேரடி தீய விளையாட்டுக்களில் அவர்களது மனம் ஈடுபாட்டுடன் உள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும். இந்த விளையாட்டை சிறார்கள் எவராவது விளையாடுவது குறித்து தகவல் தெரிந்தால், அவர்கள் இணையம் அல்லது அதுபோன்ற சாதனத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்களைத் தடுக்க வேண்டும் என்றும், உள்ளூர் காவல் நிலையத்தினரிடம் அதுகுறித்துத் தகவல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுதவிர, அரசு மருத்துவமனையினர் / அலுவல் சாரா அமைப்புகள் மூலமாக அவ்விளையாட்டை விளையாடும் சிறார்களுக்கு உளவியல் ரீதியான அறிவுரைகளும் வழங்கப்பட வேண்டும்.

நீலத் திமிங்கில சவால் விளையாட்டு தொடர்பான நேரடி இணைப்புகளை வேறுபிற நேரலை இணைப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டுமென்று பொது மக்கள் மற்றும் இணைய உபயோகிப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்திய சட்டப்படி இவ்விளையாட்டு மூலமாக பிறரைத் தற்கொலைக்குத் தூண்டுவது சட்டத்திற்குப் புறம்பான செயலும் மற்றும் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

மேலும், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி இவ்விளையாட்டு குறித்து கலந்தாலோசிக்கும் பரபரப்பான குறுஞ்செய்திகள் எதையும் பிறருக்கு அனுப்பினால் சட்டப்படி தண்டிக்கப் படுவார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sentenced to plead to play a blue whale

Best of Express