செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரித்து முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நான்கு மாத அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மனுக்கள் தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்ற உத்தரவை சாதகமாகக் காட்ட கூடாது எனவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து முடிக்க நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி ஜெயசந்திரன், அதற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.