அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மற்றும் அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். தொடர்ந்து அவர் ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் செந்தில்பாலாஜியிடம் இருந்த மின் துறையும், கலால் துறையும் இரண்டு அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் துறைகள் இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பதவியில் நீட்டிப்பதற்கு எதிரப்பு தெரிவித்தும், அவரை பதவியில் இருந்து நீக்கவும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதனால் இந்த வழக்கையும் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“