சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜுன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து இதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டது. சிகிக்சைக்குப் பின் அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தப் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து ஜாமின் கோரி செந்தில் பாலாஜி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல் செய்து வரும் நிலையில், அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 9 ஆம் தேதி அதிகாலை, சிறை வளாகத்திற்குள் நடைப்பயிற்சி செல்ல முயன்ற போது, காலில் உணர்வு குறைந்து செந்தில்பாலாஜி நிலைத்தடுமாறியதாக கூறப்படுகிறது. உடனடியாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார்.
இதயவியல் தலைமை மருத்துவர் மனோகரன் தலைமையிலான சிறப்பு குழுவினர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்கினர். மருத்துவர்கள் கூடுதல் மாத்திரைகள் பரிசோதித்த நிலையில் அவர் மீண்டும் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் கால் மரத்துப் போதல் உள்ளிட்ட உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று (நவ.17) எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“