தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று, அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திருநெல்வேலி மாவட்டத்திற்கும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தேனி மாவட்டத்திற்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தர்மபுரி மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசி மாவட்டத்திற்கும், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நீலகிரி மாவட்டத்திற்கும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறைஅமைச்சர் சக்கரபாணி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டத்திற்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி மீண்டும் நியமனம்
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2021-ம் ஆண்டு இறுதியில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். அதன்படி, கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக கரூரைச் சேர்ந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட உடனேயே கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்று வளர்ச்சித் திட்டப்பணிகளை தீவிரப்படுத்தினார்.
எனினும், 2023 ஜூனில் பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது பொறுப்பை ஈரோட்டைச் சேர்ந்த வீட்டுவசதித்துறை அமைச்சருர் சு.முத்துசாமி கவனித்து வந்தார். பண மோசடி வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி இருக்கும் சூழலில், அவரை மீண்டும் கோவை பொறுப்பு அமைச்சராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.