தமிழ்நாட்டில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானைக் கடைகளில் மது விற்பனை மூலம் வரும் வருவாய் தமிழக அரசுக்கு முக்கிய வருவாயாக உள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 4829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
பண்டிகைகள் காலம், விழா நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பெரிய அளவில் மதுபானம் விற்பனை செய்யப்படும் குறிப்பாக, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானம் விற்பனை சாதனை படைக்கும்.
அதே நேரத்தில், தமிழக அரசு சார்பில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட வலியுறுத்தி வருகின்றன. கடந்த மாதம் வி.சி.க சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
இருப்பினும், தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபான விற்பனை என்பது ஆண்டு தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. இதற்கு டாஸ்மாக் நிர்வாகத்தால் இலக்கு வைத்து மது விற்பனை செய்யப்படுகிறது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் கோவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர் ஒருவர் “தீபாவளி பண்டிகை நாளில் டாஸ்மாக்கில் விற்பனை எவ்வளவு வந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, “கேட்டுவிட்டு சொல்கிறேன். ஏனென்றால் நேற்றும், இன்றும் அரசாங்க விடுமுறை. இதனால் கேட்டுவிட்டு எவ்வளவு என்று சொல்கிறேன்” என சிரித்தபடி கூறினார்.
இருப்பினும், தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளர், “கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.90 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது என்று ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, “எப்படி உங்களுக்கு மட்டும் தெரியும். ஏனென்றால் நேற்று இரவு 10 மணிக்கு தான் கடையை சாத்தியிருப்பார்கள். நாம் இன்று நல்ல நிகழ்ச்சியில் இருக்கிறோம். இரவு 10 மணிக்கு கடை மூடியபிறகு இன்று மதியத்துக்குள் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். முடியட்டும். பார்க்கலாம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“