சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதனிடையே செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Senthil Balaji News
மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம். விசாரணையை அந்த மருத்துவமனையிலேயே தொடர வேண்டும். 23-ம் தேதி மாலை வரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு, மீண்டும் மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அமலாக்கத்துறை விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஜூன் 21-ஆம் தேதி (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் இந்த மனு நீதிபதி சூரிய காந்த் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“