Senthil Balaji asks all parties to oppose electricity amendment bill: மின்சார திருத்த சட்ட மசோதா சாமானிய மக்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது,
மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்: டெல்லி வக்கீலை அழைத்து வர அவகாசம் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு: அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு தள்ளிவைப்பு
நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு மிக கடுமையாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து, தி.மு.க.வின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னார்.
இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள், மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள். மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது.
மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அ.தி.மு.க, பா.ஜ.க இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதாவானது நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணம் தி.மு.க.,தான். நிச்சயம் மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சிதான் இது.
பாதிப்பை தெரிந்தே, மத்திய அரசு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவினால், நமது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். இதனால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோருக்கு மின்சார திருத்த சட்ட மசோதாவால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. சாமானிய மக்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும் மசோதா என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil